jaga flash news

Sunday 22 November 2015

செவ்வாய் தோஷம்:,நாக தோஷம் :கஜகேசரி யோகம்

முற்காலத்தில் ஜோதிடம் ஆன்மீக வாழ்க்கையின் நிலையை அறிந்து கொள்ள மட்டுமே பயன்பட்டது. வேதசாஸ்திரத்தில் நமது கர்மத்தின் அமைப்பே அடுத்த செயல் என்றும் கர்ம வினையே எதிர்கால வாழ்க்கைக்கு காரணம் என்கிறது. இதை ரூபிக்கும் கருவியே ஜோதிடம். ஒருவர் நல்ல கர்மம் செய்வாரா? அதன் மூலம் முக்திக்கு வழியுண்டா என ஆராயும் கருவியாகவே ஜோதிடம் பயன்படுத்தப்பட்டது. நடைமுறையில் கூறப்படும் தோஷங்களும்,யோகங்களும் ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்காக கண்டறியப்பட்டது. முற்காலத்தில் பார்க்கப்பட்ட தோஷம் மற்றும் யோகங்களை ஆன்மீக ரீதியாக ஆராய்வோம்.
செவ்வாய் தோஷம்:
செவ்வாய் தோஷம் என்பது பலரையும் துன்பத்தில் ஆழ்த்தும் விஷயம், இதை முற்காலத்தில் சன்யாசிகளுக்கு மட்டுமே பார்த்தார்கள் என்பது ஆச்சரியப்பட கூடிய விஷயம். செவ்வாய் என்பது காம உணர்ச்சிகளையும் கோபத்தையும் குறிக்கும் கிரகம். செவ்வாய் பிறப்புறுப்பை குறிக்கும் கிரகம் ,இதை விருச்சிக ராசிக்கு செவ்வாய் அதிபதி யாக வருவதன் மூலம் அறியலாம். இத்தகைய செவ்வாய் 4,7,11 வீடுகளில் காணப்படும் சமயம் அதிக காம உணர்வையும், 2-8 ஆம் வீடுகளில் சம்பந்தப்படும் சமயம் கோபத்தையும் காட்டும். இவை அனைத்தும் சன்யாசிக்கு உகந்த உணர்வுகள் கிடையாது. செவ்வாயின் நிலையை கண்டறிந்து அதன் பின்பே சன்யாசம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில் திருமணம் செய்ய உள்ள இளம் வயதினருக்கு செவ்வாய் தோஷத்தை பார்த்து, செவ்வாய் தோஷ வர்த்தி வேறு செய்யப்படுகிறது. குடும்ப வாழ்வில் ஈடுபடும் இவர்கள் காம மற்றும் கோப உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் சிறந்த மணவாழ்வை வாழமுடியாது அல்லவா? செவ்வாய் தோஷத்தை பற்றி சிறிது சிந்தியுங்கள்.
நாக தோஷம் :
நாக தோஷம் என்பது ராகு கேது எனும் சாயா கிரகங்கள் 2,8 அல்லது 1,7 ஆம் வீடுகளில் சம்மந்தப்பட்டால் நாக தோஷம் என கூறுகிறார்கள். இதனால் மணவாழ்க்கை தாமதமாகும் மேலும் மணவாழ்க்கையில் சிக்கல்கள் காணப்படும் என கூறி பரிகாரங்களுக்கு திசை திருப்புகிறார்கள். முற்காலத்தில் தவ வாழ்வை மேற்கொள்பவர்கள் காடுகளுக்கு சென்று ஏகாந்த உணர்வில் தியானிப்பார்கள். மேலும் அனைத்து கடமைகளும் வாழ்வில் முடிவடைந்தவர்கள் வனப்பிரஸ்தம் எனும் வாழ்வியல் முறையிலும் வாழ்ந்தார்கள்.
கொடிய வனத்தில் அவர்கள் வாழும் பொழுது பாம்புகள் மற்றும் தேள் போன்ற விஷ ஜந்துக்கள் மூலம் தீங்கு வருமா என கண்டறிய உதவியது தான் இந்த நாக தோஷம். 2,7 ஆகியவை மாரகஸ்தானம் இவற்றில் சம்பந்த பட்ட சாயாகிரகம் விஷத்தின் மூலம் மரணத்தையும்,1,8 தொடர்பால் விஷத்தின் மூலம் ஆபத்தையும் கொடுக்கும் என கண்டறிந்தார்கள். ஆனால் இதை நாம் மணவாழ்க்கைக்குள் நுழையும் பெண் ஜாதகத்தில் பார்க்கிறோம். திருமணமான தம்பதிகள் காட்டில் வாழப்போகிறார்கள் என்றால் இதை எடுத்துக்கொள்ளலாம்.
கஜகேசரி யோகம் :
சந்திரனுக்கு 1,5,9ஆம் வீடுகளில் குரு இருந்தால் கஜகேசரியோகம். இதை பெற்றவர்கள் சுகபோக வாழ்வை அனுபவிப்பார்கள் என்பது தற்கால ஜோதிடர்களின் கருத்து. உண்மையில் இது போன்ற அமைப்புள்ளவர்கள் பாக்கியசாலிகளே. மனதை குறிக்கும் கிரகமான சந்திரன்(மனோகாரகன்) ஆன்மீக குருவான தனது வழிகாட்டியை மனதில் நினைத்து எப்பொழுதும் அவருக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். இத்தகைய அமைப்பு பெற்றவர்களை குரு தன்னிடத்தில் நிரந்தரமாக இருக்க அனுமதிப்பார். ஆனால் இன்றையகால கட்டத்தில் பொருள்தேடி ஓடுபவர்களுக்கு இந்த யோகத்தை பார்ப்பது நகைப்புக்குரியது.
இவ்வாறு யோகத்தையும் தோஷத்தையும் விவரித்து கொண்டே செல்லலாம். உண்மையை ஆராய்ந்து பலன் சொல்லும் நிலைவரும் பொழுது மட்டுமே இதற்கு தீர்வு உண்டு. விஞ்ஞான ஜோதிட ரீதியாக ஆன்மீக வாழ்வை ஆராய்ந்தால் இது போன்ற குழப்பங்கள் ஏற்படாது.

No comments:

Post a Comment