jaga flash news

Thursday, 26 November 2015

ஸ்ரீகிருஷ்ண மகிமை!

ஒருவன் மரணப் படுக்கையில் கிடந்தான். எதிரில் அவன் கண்ணுக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த மான் குட்டியைப் பார்த்தான். 'அடடா... இந்த மான்குட்டி எவ்வளவு அழகு’ என்று பிரமித்தான். 'சிறு வயதில் இருந்தே இந்தக் குட்டியை நாம்தானே வளர்த்து வருகிறோம்’ என்று நினைத்து மகிழ்ந்தான். 'சரி... என் மறைவுக்குப் பிறகு, இந்த மானுக்கு யார் தண்ணீர் தருவார்கள்; உணவு கொடுப்பார்கள்?' என மானைப் பற்றிய நினைப்பிலேயே இருந்தவன்... இறந்து போனான். இதனால் அவன் அடுத்த பிறவியில் மானாகப் பிறந்தான்! ஆக, பக்தியுடன் திகழும் ஒருவர், தன் இறுதிக் காலத்தில் பகவானை நினைத்தால்தான் பகவானை அடையமுடியும்.
ஆனால் சரணாகதி அடைகிற சிந்தனையுடன் திகழ்பவனுக்கு அதெல்லாம் இல்லை. 'உன்னைத் தவிர வேறு கதியே இல்லை எனக்கு. நீதான் என்னை வழிநடத்தணும்; நீதான் என்னைக் காபந்து செய்யணும்; நீதான் என்னை ஆட்கொள்ளணும்’ என்று இறைவனிடம் எவனொருவன் சரணாகதி அடைகிறானோ, அவன் தன் இறுதிக் காலத்தில், கடவுள் பற்றி நினைக்கத் தேவையே இல்லை. 'என்னிடம் சரணாகதி அடைய நினைப்பவர், மரண வேளையில் என்னை நினைக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் நினைவு தப்பியபடி மரணத்தைத் தழுவினாலும் நான் நினைவில் வைத்திருந்து, அவனை ஆட்கொள்வேன்; என் திருவடியில் அவனைச் சேர்த்துக் கொள்வேன்’ என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அதுதான் ஸ்ரீகிருஷ்ண மகிமை!

1 comment: