jaga flash news

Monday 2 November 2015

தெளிவு குருவின்--- " உற்றது சொன்னால் அற்றது ஒட்டும் "

தெளிவு குருவின்--- " உற்றது சொன்னால்
அற்றது ஒட்டும் "
---------------------------------
காட்டில் வாழும் பாண்டவர்கள் நிறைய
சோதனைகளை சந்தித்தனர்.
காட்டில் அமித்ர முனிவரின் ஆசிரமத்தில் ஒரு
கருநெல்லி மரம் உண்டு. அதில் பன்னிரெண்டு
வருடங்களுக்கு ஒருமுறை ஒரே ஒரு
நெல்லிக்காய் உருவாகும். அங்கே வந்த
பாஞ்சாலி நெல்லிக்கனிக்கு ஆசைப்பட
அர்ஜுனனும் அந்த நெல்லிக்கனியை பறிக்க
அதைக்கண்ட முனிவரின் சீடர்கள் பன்னிரெண்டு
ஆண்டுகள் தவமிருந்த பின் இந்த கனியை
அமித்ர முனிவர் உண்பார். வேறு எந்த
உணவும் உண்ண மாட்டார். இப்படி தவறு
இழைத்து விட்டீர்களே என்று கூறினர்.
உடனே தர்மர் உள்பட எல்லோரும் அங்கே வர
கிருஷ்ணனை அழைத்து உதவி கேட்கலாம்
என்று முடிவாகி தர்மன் கிருஷ்ணரை
அழைத்தான். கிருஷ்ணர் வந்து மரத்தில்
இருந்து பறித்த நெல்லிக்காய் மீண்டும்
மரத்தில் ஒட்டவைக்க ஒரே ஒரு வழிதான்
உண்டு. அது நீங்கள் ஆறு பேரும் தங்கள்
மனதில் உள்ளதை உள்ளபடியாக யாருக்கும்
தெரியாத உண்மையை சொல்லும் போது
அறுந்துபோன இந்த நெல்லிக்காய் தானாகவே
மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும் என்றார்.
ஒவ்வொருவராக தங்கள் மனதில் உள்ளதை
சொல்ல ஆரம்பித்தனர்.
தர்மர் : எனக்கு பாரதப் போரில் வெல்ல
வேண்டும் என ஆசையில்லை. என் லட்சியம்
அற வழியில் செல்ல வேண்டும், தர்மம்
காப்பாற்றப் பட வேண்டும். சத்தியம்
ஜெயிக்கணும். இதை தவிர வேறொன்றும்
இல்லை என்றார்.
அர்ஜுனன் : எனக்கு புகழ் பைத்தியம் உண்டு.
ஆசை உண்டு. யாராவது என்னை புகழ
வேண்டும் என்று நினைப்பேன்.
பீமன் : பிறர் பொருளுக்கு ஆசை கொண்டவன்
இல்லை. பிறர் மனைவி பற்றி நினைத்து
இல்லை. அவர்களை பெற்ற தாய் போல்
எண்ணுவேன். பிறர் கஷ்டம் என் கஷ்டம் போல்
எண்ணுவேன்.
நகுலன் : கல்வி, ஞானம், அறிவு இல்லாத
படிக்காத மக்களிடம் நான் மரியாதை
காட்டுவதில்லை. அவர்கள் மனமில்லாத மலர்
போன்றவர்கள்.
சகாதேவன் : தர்மம் எனக்கு சகோதரன். ஞானம்
தான் அப்பா. கருணை என் தோழன். சாந்தம்
தான் மனைவி. எலும்பு தோலும் ஆன இந்த
உறவில் நம்பிக்கை இல்லை.
ஆனால் பாண்டவர்கள் ஐவரும் ஒவ்வொன்றாக
கூறினும் காய் ஒட்டவில்லை.
கலங்கிய திரௌபதி : இந்த ஐந்து பொறிகள்
போல, ஐந்து புலன்கள் போல ஐந்து பேர்
கணவராக அமைந்திருந்தும் ஆறாவதாக வேறு
ஒருவரும் என் கணவனாக வேண்டும் என்று
என் மனம் அடிக்கடி விரும்பும்.ஆழ்மனதில்
இருந்த ஒரு வெளிப்படுத்த முடியாத
உண்மையை திரௌபதி வெளிப்படுத்திய
அடுத்த நொடியே நெல்லிக்காய் மரத்தோடு
ஒட்டிக் கொண்டது.
மேலே உள்ளதை மட்டும் படித்துவிட்டு
திரௌபதியை பற்றி தவறான எண்ணத்திற்கு
வந்துவிட வேண்டாம். காரணம்?? பொதுவாக
புராண இதிகாசங்கள் எழுதப்பட்டதில் நாம்
தெளிவு பெற வேண்டிய பல அடுக்குகள்
உள்ளன. அதாவது ஸ்தூலம், சூட்சமம்
மற்றும் காரணம் என பல அடுக்குகள் உள்ளன.
ஒருவர் அவற்றை படிக்கும் மனநிலை,
பக்குவம் மற்றும் சூழ்நிலை பொருத்தே அதன்
பொருள் விளங்குமே தவிர, உண்மையான
பொருள் என்பது அனைவருக்கும் ஒன்றாக
இருக்காது. அதேபோல் தவறான
கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கும் அது
தவறான பொருளையே காட்டும். அதாவது
எந்த விதத்தில் பார்க்கின்றீர்களோ அதற்கு
உண்டான விளக்கத்தையே கொடுக்கும் தனி
சிறப்பும் இப்புராண இதிகாசங்களுக்கு உண்டு.
மேலும் பக்தி நெறியில் உள்ளவர்களுக்கு
எப்படியெல்லாம் நடக்க வேண்டும்,
எப்படியெல்லாம் நடக்க கூடாது என்ற
விதத்தில் கதைவடிவில் இருக்கும். அப்படி
நல்லமுறையில் நடப்பவர்கள் அடையும்
நிலைக்கு நாயன்மார்கள், ஆழ்வார்கள்,.,
போன்றோரை உதாரணமாக காட்டியும், நடந்து
கொள்ள கூடாத குணமுடையவர்களின்
முடிவுநிலைக்கு அரக்கர்கள் மற்றும் அவர்கள்
அழிவை உதாரணமாக காட்டியும் இக்கதைகள்
இருக்கும். இப்படி பக்திநெறியில் பக்குவம்
அடைந்தவர்களுக்கு அதே கதைகளை
கொண்டே விஞ்ஞான மெஞ்ஞான, அதாவது
யோக ஞானமுறையில் முறையில் தெளிவு
பெறசெய்து கடைதேற்றுவர். காலப்போக்கில்
இந்தமுறைகள் மறைந்துவிட்டது என்று
கூறினாலும், இவற்றின் உண்மையான
விளக்கங்கள் உண்மையானவர்களுக்கு
தற்போதும் கிடைத்து கொண்டுதான் உள்ளது.
மேலே கூறப்பட்ட கதை என்பது
மகாபாரதத்தின் ஒரு சின்ன சிறிய அங்கமே!!
விளக்கம் 1: ஒரு கனி மரத்திலிருந்து விழுந்த
பிறகு அது மறுபடியும் மரத்தில்
ஒட்டுவதற்கு எந்தவித சாத்தியமும் இல்லவே
இல்லை. அப்படி இருக்க ஆழ்மனதின்
வெளிபடுத்த முடியாத ஒரு உண்மையை
வெளிப்படுத்திய உடன் அக்கனி
ஒட்டிகொண்டது என்ற உவமை எதற்கு??
காரணம் உண்மைக்கு அத்தகைய சக்தியுண்டு!!
இதை இந்த உலகில் வாழ்ந்த அத்தனை
மகான்களும் சொல்லியும் அவ்வழியே
வாழ்ந்தும் காட்டினர். ஒரு குழந்தை தன்
கால்களை கைகளால் பிடித்தும் வாயால்
கவ்வியும் விளையாடும். ஆனால் நம்மால்
அப்படி இருக்க இயலாது. காரணம்?? மனதில்
வெளியே சொல்லமுடியாத எத்தனையோ
உண்மைகளின் இறுக்கத்தால்தான். அப்படி
ஒருவன் அதை வெளிப்படுத்தும் போது
அவனுக்கு நிகர் இந்த உலகில் யாரும்
கிடையாது. அந்த உண்மைக்கு நிகரான தவம்
இந்த உலகில் எதுவும் கிடையாது.
விளக்கம் 2: திரௌபதி ஆறாவதாக கூறிப்பிட்ட
கணவனின் பெயர் கர்ணன். பஞ்சபாண்டவர்கள்
என்பது நம் ஐம்புலன்களை குறிக்கும்.
திரௌபதி என்பது மனதையும், கர்ணன்
என்பது அறிவை குறிக்கும். ஐம்புலன்களால்
அவதிப்படும் மனதானது சுத்த அறிவை
நாடுகின்றது என்று பொருள்.
விளக்கம் 3: கர்ணன் என்ற பெயர் உடலின்
சுழுமுனை நாடியை குறிக்கும்.
விளக்கம் 4: இக்கதையில் ஒரு பெண்ணை
தவறாக சித்தரிக்க காரணம் என்ன?? ஏன் அப்படி
சித்தரிக்க வேண்டும்??
திரௌபதியை " ஐவருக்கும் பெண்டாட்டி
அழியாத பத்தினி " என்றே இன்றும்
அழைக்கின்றனர். அப்படி இருக்க அவளுக்கு ஏன்
இப்படி ஒரு எண்ணம் தாக்க வேண்டும்??
உண்மையில் அவள் பத்தினியாக இருந்த
காரணத்தினால் தான் அவளுக்கு இப்படி ஒரு
எண்ணம் தாக்க காரணமாக அமைந்தது.
தூய்மையான ஒருவனுடைய எண்ணம் சொல்
செயல் எப்படிப்பட்ட சக்தி கொண்டது என்பதை
உணர்த்துவதற்கும்,ஒரு பத்தினியின் சக்தியை
உணர்த்துவதற்காகவும் இக்கதை
எழுதப்பட்டது. குந்திதேவி " எனது மகன்கள்
அனைவரும் சரிசமமாக பிரித்துக் கொள்ளுங்கள்
" என்ற வார்த்தையை மதித்தே ஐவரும்
திரௌபதியை திருமணம் செய்தனர். இதில்
முதல் மகனான கர்ணனையும் சேர்த்து ஆறு
பேர்களை குறிக்கும். திரௌபதி பத்தினி
என்பதால் குந்தியின் வார்த்தைகள் அவளை
தாக்கியதே தவிர வேறு ஒன்றுமில்லை.
கர்ணன் தான் முதல் மகன் என்று
தெரியாவிட்டாலும் அவள் உள்ளுணர்வு அதை
வெளிபடுத்திக் கொண்டே இருந்தது. அதனால்
தான் அவளுக்கு அப்படி ஒரு எண்ணம்
எழுந்தது!!!
உண்மையில் உற்றதை சொன்னால் கண்டிப்பாக
அற்றது ஒட்டும்!!!
மகாஅவதார் பாபாஜியின் சீடர்களுல் ஒருவரான
லாகிரி மகாசாயர் புராண இதிகாச
கதாபாத்திரங்களை கொண்டு மேலும் விளக்க
தருகின்றார். மகாபாரதம் மற்றும் கீதை போன்ற
நூல்களூக்கு இவர் தந்த விளக்கங்கள்
அனைத்தும் யோக ஞானத்தை குறித்தே
இருந்தன. அவை பெரும்பாலும் முத்திக்கு
வழிவகுத்தன. அவருடைய நூல்களிலிருந்து
சில விளக்கங்களை காண்போம்.
ஸ்ரீ கிருஷ்ணர்- கூடஸ்தா அல்லது
புருவமத்தி
மதுரா- சிரஸ்
தேவசி- சரீரம்
வசுதேவர்- ஆத்மா
கம்சன்- மாயை
கோகுலம்- தொண்டையின் அடிப்பாகத்தில்
நாக்கை இணைத்திருத்தல்
பிருந்தாவனம்- கூடஸ்தாவின் உள்ளே வனம்
முதலியவைகளைப் பார்த்தல்
பலராமர்- பலத்துடன் வாயுவை நிலை
நிறுத்துதல்
பசு மேய்த்தல்- பசு என்பதன் பொருள் நாக்கு,
மேய்த்தல் என்றால் எடுத்து செல்லுதல்.
அதாவது நாக்கை உள்வாயின் மேல் உள்ள
துளையில் எடுத்து செல்லுதல்
வெண்ணை திருடல்- சந்திரன் மறைவு.
சந்திரன் கூடஸ்தாவில் கலந்துவிடல்
இரண்டு அர்ஜீனன்மார்கள்- இடா பிங்களா
அநேக அசுரர்கள்- மனதை வேறு திசையில்
திருப்புதல்
கீழே விழச்செய்தல்- அதாவது இடா
பிங்களாவை துறந்து சுழுமுனையில்
ஸ்திரமாக இருந்தல்
இந்திரன் யாகம்- கூடஸ்தாவின் உள்ளே
பிரம்மத்தில் நிலையாக இருந்து விடுதல்
நிவாரணம்- மனதை வேறுபுறம்
செலுத்துவதை தடுப்பது
தன்யாகம்- கிரியாவை கடந்த நிலை அல்லது
சமாதி
இந்திரன் கோபமடைந்து கனமழை பெய்து
விடுவது- பற்றினால் கண்கள் மூலம் அல்லது
அனுமானமாக மனதை மற்ற சத்தியங்களின்
தத்துவங்கள் மீது நிலைநிறுத்தி பலவிதமான
சிந்தனைகளை விருத்தி செய்தல்
கோவர்தன்மலை தூக்குதல்- ஓம்கார
கிரியாவிற்காக நாக்கை மேலே எழுப்பி நிலை
நிறுத்துதல்
முலைப்பால் மூலம் பூதனையின் வதம்-
இதயத்தில் வாயுவை நிலை நிறுத்தி
அநாத்மாவை நாசம் செய்தல்
இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும்
ஒவ்வொரு விதமான விளக்கத்தை
அளிக்கின்றார். ஒரு தெளிந்த குருவினால்
விளக்கப்படும் வகையிலும் அல்லது ஒரு
பக்குவமடைந்த சீடனுக்கு உணர்த்தும்
வகையிலும் இந்நூல்கள் வடிவமைக்க
பட்டிருக்கின்றன. அக்காலத்தில் இது போன்ற
நூல்களை கொண்டே ஞானம் பெற்றதாகவும்
சொல்லப்படுகின்றது. இன்றும்
இந்தோனேசியாவில் இக்கதைகளுக்கு யோக
ஞான முறையில் விளக்கங்கள் தரப்பட்டு
வருகின்றன. நாம் தகுதியாக இருக்கும்
பட்சத்தில் அனைத்தும் நம்மை
இயற்கையாகவே வந்து அடைகின்றன.
இதற்கென்று பெரிதாக நாம் எதுவும் செய்ய
தேவையில்லை. முதலில் நமக்கு நாமே
உண்மையுடன் இருந்தாலே போதும். மற்ற
வழிகள் தானே திறக்கப்படும்

1 comment:

  1. அய்யா...! வெ.சாமி அவர்களுக்கு, 2019−ன் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete