jaga flash news

Friday 22 May 2015

ஒளிவிளக்கு

இறைவனை ஒளியாக வணங்குவது ஆன்மீக மரபு. ஞானத்தின் அடையாளமாகவும், முழுமையின் உருவாகவும் இருப்பது ஒளியே ஆகும்.

இறைவனை உருவமாக வணங்கி பின்பு உருவ-அருவமாக வணங்கி முடிவில் அருவமாக வணங்கும் நிலை என்பது ஆன்மீகத்தின் படிநிலை.

அடிப்படை மனிதனுக்கு ஆரம்ப நிலையில் அருவமாக இறைவனை வணங்குதல் என்பது மிகவும் சிரமமான காரியம். அதனால் இறைவனை ஒளி வடிவில் வணங்குதல் என்பது அதற்கான எளிய முயற்சியாக இருக்கும்.

பாரத கலாச்சாரத்தில் தோன்றிய அனைத்து மதங்களிலும், ஆன்மீக கோட்பாடுகளிலும் ஒளி வழிபாடு என்பது முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நம் நாட்டிற்கு வந்த பிற மத கோட்பாடுகள் கூட நம் கலாச்சாரத்தின் அடையாளமாக ஒளியை தன் கட்டமைப்புக்குள் எடுத்துக்கொண்டது.

உபநிஷத்தில் ஒளியை பற்றி பல கருத்துக்கள் இருக்கிறது. சில உபநிஷத்தில் ஒளியை பற்றிய விளக்கமும், சிலவற்றில் ஒளியின் அடிப்படை கோட்பாடுகளை பற்றியும் விளக்குகிறது.

வேதத்தில் பல இடங்களில் அக்னியை பற்றியும் அதன் ஒளியை பற்றிய சுவடுகள் உண்டு.

ஈசாவாஷிய உபநிஷத்தில் சாந்தி மந்திரம் எனக்கு பிடித்த ஒன்று. பூர்ணமிதம் என துவங்கும் அந்த மந்திரத்திற்கு வெளிப்படை உதாரணமாக இருப்பது விளக்கின் ஒளியாகும்.

ஞானம் என்பது பரிபூரணமானது, ஞானம் ஒருவருக்கு கிடைக்கும் பொழுது முழுமை நிலையை அடைகிறார். ஞானம் பெற்றவர் மற்றொருவருக்கு ஞானம் வழங்கும்

பொழுது தனது ஞான நிலையில் குறைவதில்லை. அது போல விளக்கு ஒளி தான் முழுமையான ஒளியுடன் திகழ்ந்து, தான் பெற்ற ஒளி மற்றொரு விளக்குக்கு அளிக்கும் பொழுது முழுமையாக அளித்து தானும் ஒளி குன்றாமல் இருக்கும்.


உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் விளக்கை ஒரு அங்கமாக்கினால் உங்கள் ஆன்ம நிலை தங்கமாகும்.

இப்படித்தான் ஒரு ஆன்மீகக்கூட்டத்திற்கு சென்று இருந்தேன். அங்கே சில ஆன்மீக அன்பர்கள் மேடையில் அமர்ந்து என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் சிலர் மரியாதையாக பேசுவதாக எண்ணிக்கொண்டு இப்படிச் சொன்னார்கள், “தயவு கூர்ந்து விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்கள். என் பின்னால் நின்று இருந்த சுப்பாண்டி என்னிடம் குனிந்து, “ஸ்வாமி மேடை சுத்தமாத்தானே இருக்கு எதுக்கு இப்ப விளக்குமாறு கேட்கறாங்க” என்றான்.
அன்று விளக்குமாறு கிடைத்திருந்தால் எனக்கும் பயன்பட்டிருக்கும். :)


கலாச்சார மாறுபாடுகளால் விளக்கு ஏற்றும் முறைகூட மறந்து ஏனையோர் இருக்கிறார்கள். சிலர் என்னிடம் வீடுகளில் விளக்கேற்றும் முறைபற்றி கேட்பது உண்டு.

விளக்கை பற்றி விளக்கச்சொன்னால் என்ன விளக்குவது?

ஒளியை விளக்கும் அளவிற்கு எனக்கு ஒளி உண்டா என தெரியாது. இருந்தாலும் நம் தினமும் எப்படி ஒளி ஏற்ற வேண்டும் என்பதை விளக்குகிறேன்.

  • ஐந்து முக விளக்கு, காமாட்சி விளக்கு என பல விளக்குகள் இருந்தாலும் உருவம் பொறிக்கப்படாத அத்ம விளக்கு என்பதே விளக்குகளில் சிறந்தது.
  • மையத்தில் செங்குத்தாக திரி இருக்கும் படி வட்டவடிவில் இருக்கும் விளக்கின் அமைப்புக்கு அத்ம விளக்கு என பெயர்.
  • ப்ரார்த்தனை அறையில் அத்ம விளக்கு இல்லாமல் வேறு விளக்குகள் இருந்தாலும் பயன் இல்லை.
  • பஞ்ச முக விளக்குகள் வைத்தால் இரண்டு ஜோடியாக வைக்க வேண்டும். அத்ம விளக்கு எப்பொழுதும் ஒன்று தான் வைக்க வேண்டும்.
  • விளக்கு வெண்கலம் அல்லது தங்கத்தால் செய்யப்பட்டிருந்தால் நலம். கல் விளக்கு, இரும்பு விளக்கு, செம்பு இவைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  • நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டுமே விளக்கிற்கு பயன்படுத்த வேண்டும்.
  • திரியை ஜோடியாக (இரண்டாக) விளக்கில் ஏற்ற வேண்டும். ஒற்றையாக வைக்கக்கூடாது.
  • பஞ்ச முக விளக்கில் ஒரு முகம் மட்டும் ஏற்றுகிறோம் என்றால் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். அத்ம விளக்குக்கு பயன்படுத்தும் பொழுது எந்த திசை பார்த்து இருக்க வேண்டும் கவலை இல்லை, அதனாலேயே அத்ம விளக்கு சிறந்தது என்கிறேன்.
  • காலை மற்றும் மாலை இரு வேளையும் தீபம் ஏற்ற வேண்டும். 150 மில்லி எண்ணெய் கொள்ளும் ஒரு விளக்கில் 12 மணி நேரம் ஒளி இருக்கும். அதனால் 24 மணி நேரமும் ஒளி கொண்ட தன்மை பெற முடியும்.
  • தீபத்தை அணைக்க நேர்ந்தால் புஷ்பம் கொண்டோ அல்லது விபூதி கொண்டோ அணைக்கலாம். வாயால் ஊதி அணைக்கக் கூடாது.
  • பஞ்சபூதங்கள் அனைத்து உருவாக்கத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. விளக்கு ஏற்றுவதில் முழுமையாக பஞ்சபூதங்களின் தன்மை இருக்கிறது.
  • விளக்கின் உலோகம் மண் தன்மை கொண்டதாகவும், எண்ணெய் நீர் தன்மை கொண்டதாகவும், ஒளி நெருப்பின் அமைப்பிலும், ஒளி தொடர்ந்து கிடைக்க காற்றும் ஆகாயமும் பின்புலத்தில் செயல்படுகிறது. பஞ்சபூத நிலையில் இருக்கும் விளக்கை வழிபடுவதால் பஞ்சபூதம் நிலையில் இருக்கும் இறைவனை வணங்குகிறோம்.

வள்ளலார் தனது ஆன்ம பயிற்சியில் முக்கியமாக ஒளி நிலையை பற்றிய தியானத்தை குறிப்பிடுகிறார். ஒளியை தொடந்து தியானிக்க முடிவில் நம் உடல் ஒளியாகும் என்கிறார். அதை செய்தும் காட்டினார்.

வள்ளலாரின் ஆன்மீக வழிகாட்டியான திருமூலர் விளக்கை பற்றி அருமையாக விளக்கி உள்ளார்.


விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளைக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான்கழல் மேவலும் ஆமே

------------------------------------------------------------திருமந்திரம் 2816

உடல் என்ற விளக்கின் உள்ளே ஒளியாக மற்றொரு விளக்கு உண்டு. அதன் பெயர் ஆன்மா. உடலின் உள்ளே சென்று ஆன்ம ஒளியை தூண்டி ஆன்மாவின் மூலம் பரமாத்மாவை அறிய முயற்சிப்பவர்களுக்கு பரமாத்மாவின் சொரூப நிலையை அடையலாம்.

விளக்கை தூண்டுங்கள் உங்களின் உள்ளே இருக்கும் விளக்கை தூண்டுங்கள். இறை ஒளி உங்களில் ஒளிரட்டும்.

No comments:

Post a Comment