jaga flash news

Friday, 4 December 2015

பாண்டுரங்கன் யார்?

பாண்டுரங்கன் யார்? விடோபா தானேரெண்டு பேருமே கிருஷ்ணன் தானே? இதன் பின்னால் இருக்கும் விஷயமே இன்றைய குட்டி கதை. கிருஷ்ணன் குழந்தையாக இருந்தபோது தூக்கி வரப்பட்டு யசோதை நந்தகோபனிடம் வளர்ந்து ஆயர்பாடியில் மற்ற சிறுவர் சிறுமியரோடு ஓடி ஆடி விளையாடி கோபர் கோபியருடன் வாழ்ந்த பருவத்தில் அவனுக்கு உயிராக இருந்தவள் ராதா அல்லவா. கண்ணும் இமையும், நகமும் சதையும் போல் மட்டுமல்ல, ஓருயிரும் ஈருடலுமாச்சே!! அந்த ராதையை பிரிந்து பின்னர் கிருஷ்ணன் வடமதுரையிலிருந்து த்வாரகை சென்றான். ருக்மணி மற்றும் பல மனைவிகள் இப்போது அந்த துவாரகை மன்னனுக்கு.இருப்பினும் ராதா அவன் நெஞ்சிலே என்றும் வாழ்ந்தாள்.
ருக்மணிக்கும் மற்ற ராணிகளுக்கும் ராதாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏன் தெரியுமா? அப்படி என்ன அவளிடம் கிருஷ்ணனே மயங்குகிற அளவுக்கு என்ற வீண் ஆவல் மட்டுமே! எனவே கிருஷ்ணனிடம் அவளை அழைத்துவர சொன்னார்கள். கிருஷ்ணனுக்கு தெரியும் அவர்கள் பக்தியினாலோ அன்பினாலோ ராதாவை தேடவில்லை. ஆவலினால் மட்டுமே என்று.
"ஆஹா அதற்கென்ன,உங்கள் அழைப்பை தெரிவிக்கிறேன் ராதையிடம்" என்றான் கண்ணன். சிலநாள் ஆகியது. "ராதா எப்போ வருவாள்?"
"உங்கள் விருப்பம் தெரிவிக்கப்பட்டதே"
"பாருங்கள்!,அந்த ராதாவின் ராங்கியை. நீங்கள் சொல்லியும் வரவில்லை. உங்களிடம் மரியாதையே இல்லை அவளுக்கு"---தூண்டி விட்டார்கள் ருக்மணியும் மற்ற ராணியரும்.
கிருஷ்ணன் இதை லட்சியம் செய்யவில்லை. மீண்டும் மீண்டும் கேட்கவே கிருஷ்ணன் ருக்மணியிடம் "ராதை உண்மை அன்பினால் மட்டுமே வருவாள். வெறும் வம்புக்காக வரவழைப்பது அவளை அவமதிப்பதாகும்.வரமாட்டாள்" என்றான் கிருஷ்ணன்.
ருக்மணிக்கு சப் என்றாகி விட்டது. கண்ணனின் நடமாட்டத்தை கவனித்து வந்தாள்.
கண்ணன் அடிக்கடி தனிமையில் தனது ஆயர்பாடி வாழ்க்கையை சிந்திப்பான்.ஒருநாள் ராதையை தேடி பிருந்தாவனம் சென்றான். ருக்மணியும் நிழலாய் தொடர்ந்தாள். தூரத்தில் இருந்து பார்த்த போது கிருஷ்ணன் நீல வண்ணமானவன் வெண்மையாக - காட்சியளித்தான்.
“கிருஷ்ணா! நீ “பாண்டுரங்கனா?”(பாண்டு:வெள்ளை, ரங்கன் நிறத்தவன்) அவளை அறியாமல் அவள் குரல் அந்த அமைதியான சூழ்நிலையில் எதிரொலித்தது. குரல் கேட்டு ராதையை அணைத்திருந்த கிருஷ்ணன் திரும்பினான்.
ஆம். ராதையை சுற்றியிருந்த வெண்மை ஒளிவட்டம் அவளது வெண்ணிற வண்ணத்தில் அவனை குளிப்பாட்டி இருந்தது. ருக்மணியை ராதா கண்டு கொள்ளவே இல்லை. இதனால் கோபமுற்ற ருக்மணி திரும்பி சென்றாள். கண்ணனையும் த்வாரகையும் விட்டு வெளியேறி கிருஷ்ணனை விட்டு எவ்வளவு தூரம் விலகி செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று கடைசியில் பண்டரிபுரம் அடைந்தாள்.
சந்திரபாகா என்றும் பீமா என்றும் அழைக்கப்படும் நதிக்கரையில் உள்ள தன்தீர்வனம் என்ற காட்டில் தன்னை மறைத்து கொண்டாள். கண்ணன் அவளை தேடி சென்றான்.
"ருக்மணி, இப்போது பார்த்தாயா ராதையின் சக்தி ரகசியத்தை, அவள் வண்ணத்தில் நான் இனி பாண்டுரங்கன் என்று நீ இட்ட நாமத்திலேயே அறியப்படுவேன். அவளை பார்க்க வேண்டும் என்றாயே, என்னில் அவள் வண்ணத்தில் அவளை காண்பாய்"
பாண்டுரங்கன் ஏகாதசி சுக்ல பக்ஷத்தில் (பவுர்ணமி வரை) சிறப்பு பூஜை பெறுகிறான்
"இல்லை. இது நான் காண விரும்பும் கிருஷ்ணன் இல்லை."
" அப்படியெனில் நான் என்னை காண விரும்பும் ஒரு பக்தனிடம் இப்போது செல்கிறேன்" கிருஷ்ணன் சென்றான்.
“ச்சே! பெண் புத்தி பின் புத்தி என்பது நிரூபணம் ஆகிவிட்டதே. கிருஷ்ணனின்றி நான் ஏது?"
ருக்மணி கிருஷ்ணனை தேடி ஓடினாள். அவனோ அதற்குள் புண்டலிகன் வீட்டு வாசலில் செங்கலில் நின்று கொண்டிருந்தான்.அவள் அவனை நெருங்கியபோது பாண்டுரங்கன் விடோபாவாக சிலையாக உறைந்து இருந்தான்.
கண்ணனை ஜெபித்து, தவறை உணர்ந்து தானும் சிலையாக உருவெடுத்து ருக்மணி, ருக்மாயியாக நமக்கு காட்சி தருகிறாள் பண்டரிபுரத்தில்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. *காரிய சித்தி மாலை*

    பந்தம் அகற்றும் அனந்த குணப்
    பரப்பும் எவன்பால் உதிக்குமோ?
    எந்த உலகும் எவனிடத்தில்
    ஈண்டி இருந்து சுரக்குமோ?
    சந்த மறைஆ கமங்கள்
    அனைத்தும் எவன்பால் தகவருமோ?
    என்று இப்பாடலைப் தினமும் பாடினால் எண்ணின காரியம் கைகூடும்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete