jaga flash news

Wednesday, 23 December 2015

தண்ணீர் தத்துவம்

தண்ணீர் தத்துவம்
ராமகிருஷ்ண பரமஹம்சர் கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பிரார்த்தனை முடிந்து உபதேசம் செய்ய ஆரம்பித்தார். அப்போது ஒரு சீடர் அவரிடம், “சுவாமி, நாம் ஏன் கோயிலுக்கு வந்து கடவுளை வழிபட வேண்டும்? அவரவர் வீட்டில் இருந்தபடியே வணங்கிக்கொள்ளக் கூடாதா?’’ என்று கேட்டார்.
‘‘அப்படியா?’ என்று கேட்ட பரமஹம்சர், ‘‘உனக்கு விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு முன் எனக்குக் கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வா,’’ என்று சீடரிடம் கேட்டார்.
சீடர் உடனே ஓடிப்போய் ஒரு சொம்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த பரமஹம்சர், ‘‘என்னப்பா இது, நான் குடிக்கத் தண்ணீர் கேட்டால் நீ சொம்பைக் கொண்டு வந்திருக்கிறாயே?’’ என்று கேட்டார்.
சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. தயங்கியபடியே சொன்னார். ‘‘சுவாமி, தண்ணீரைக் கைகளில் பிடித்துக்கொண்டு வந்தால் ஒழுகிப் போய்விடுமே, அதனால்தான் சொம்பில் பிடித்துக் கொண்டு வந்தேன்’’ என்றார்.
‘‘பக்தியும் அப்படித்தான்,’’ சுவாமி விளக்கினார். ‘‘வீட்டில் பிரார்த்தனை செய்யும்போது நம் மனம் பல விஷயங்களில் அலைபாயும். அதை ஒரு நிலையில் நிறுத்த முடியாது. ஆனால் கோயிலில் சுற்றுச்சூழல் அமைதியாக பக்தி மயமாகவே இருப்பதால் இங்கே மனம் ஒருமைப்படும்.’’

1 comment: